Saturday, July 12, 2014

                                              ராமானுஜம் - திரைவிமர்சனம்

ராமானுஜம் - கிளாசிக். நான் ஏற்கனவே இத்தளத்தில் குறிப்பிட்டுள்ள படி
இப்படத்தின் ட்ரெய்லர் தான் என்னை இப்படத்தை பார்க்கும்படி தூண்டியது.
அதில் ஒரு வசனம் “இங்கு யாருக்கும் ஜீனியஸ் தேவையில்லை ,..எல்லா
பாடத்திலேயும் பாஸாகும் சராசரி மாணவன் தான் தேவை,....”.இந்தியாவில்
திறமைகள் இந்த காலத்தில் மட்டுமல்ல எல்லா காலத்திலேயும் மிதிக்கப்பட்டு தான் வருகிறது என்பது படம் முழுக்க விரிகிறது,..இந்தியாவில்
திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்காத அதுவும் ஒரு பிராமண இளைஞன்
என்ன செய்வான் அவனால் என்ன செய்ய முடியும் அழுவான் , அதேபோல்
தான் இப்படம் முழுக்க ராமானுஜம் அழுதுகொண்டேயிருக்கிறார் .
அங்கீகாரம் கிடைக்க போராடுகிறார் . திறமை எங்கிருந்தாலும் அது தானே
வெளிவரும் என்பது போல அவருக்கு அங்கீகாரமும் கிடைக்கிறது .
இதற்கிடைப்பட்ட ராமானுஜனின் போராட்டமும் , வலியும் தான் இப்படமே..
                                    
                                        இயக்குனருக்கு இக்கதையை தேர்ந்தெடுத்தற்கு கண்டிப்பாக ஒரு சல்யூட் .ஏனென்றால் இக்கதையில் அவர் பேசும் பல
விஷயங்கள் இக்காலத்திற்கும் ஏற்றப்படி இருக்கிறது.கதையின் ஆரம்பத்தில்
இருந்தே ராமானுஜனின் புகழை பாட ஆரம்பித்து விட்டனர் . அவர் ஆசிரியரிடம் கேட்கும் குறும்பு கேள்விகளும் அதை தொடர்ந்து வரும்
பாலக அத்தியாயங்களும் கலகலப்பாக நகர்கின்றன் . அந்த சிறுவனின்
நடிப்பில் இருந்த போலித்தன்மையை மட்டும் சரிசெய்திருந்தால் அந்த
பகுதிகள் இன்னும் கலகலப்பாக நகர்ந்திருக்கும். படத்தில் வரும் அனைத்து
கேரக்டர்களும் நியாயம் சேர்த்திருக்கின்றனர் . அப்பாஸுக்கு இன்னும்
கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் .  படத்தில் ஹார்டியாக வருபவரின் நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது . அபிநய் ராமானுஜனாக
சரியான தேர்வு ...அவரது நடிப்பும் குறிப்பிடும்படி இருக்கிறது . ராமானுஜனாக
நடிக்க நிறைய உழைத்திருக்கிறார் என்பது நன்றாக இருக்கிறது . அந்த மனைவி கேரக்டரின் முகத்தில் தான் எத்தனை உணர்ச்சிகள் ஏக்கம் , தவிப்பு ,
மகிழ்ச்சி என அத்தனை உணர்ச்சிகளையும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார் .
சுஹாசினி தனது அனுபவ பூர்வமான நடிப்பின் மூலம் கவர்கிறார் ..படத்தில்
வரும் அத்தனை கேரக்டர்களும் சுவாரஸ்யம் சேர்க்கின்றார் .

                                         படம் லோ - பட்ஜெட் படம் என்பது பல காட்சிகளில்
தெளிவாக தெரிகிறது . படத்தின் ஒளிப்பதிவு படத்தின் உணர்ச்சியை
பாதிக்கவில்லை என்றாலும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் .
பிண்ணனி இசை பரவாயில்லை ரகம் தான் . ராமானுஜத்தின் மேதாவித்தனத்தை நாம் ஒரு சில காட்சிகளிலே புரிந்துகொண்டாலும்
பிரச்சாரம் செய்வதைப் போல படம் நெடுக “அவர் புத்திசாலி” என்று
படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களும் கிளைமேக்ஸ் வரை சொல்லிக்
கொண்டே இருப்பது சற்று சோர்வை ஏற்படுத்துகிறது . படம் முழுக்க தெரியும்
நாடகத்தனத்தையும் ,  மிகை நடிப்பையும் சரிசெய்திருந்தால் இன்னும்
சிறப்பாக இருந்திருக்கும் .

                                            ஆனாலும் இயக்குனர் கிடைத்த கேப்பில் மூட நம்பிக்கை,
இரண்டாம் உலகப்போர் பிரச்சினைகள் , கல்விமுறை என தனது பார்வைகளை முன்வைத்துவிடுகிறார் . ராமானுஜத்தின் வாழ்க்கையை
சரியான காட்சிகளின் மூலம் தொகுத்து தந்திருக்கிறார் . எப்போதாவது
வரும் நகைச்சுவைகாட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது . படத்தின் காஸ்ட்யூம்
மற்றும் கலைவடிவமைப்பு அருமையாக உள்ளது . அந்த காலகட்டத்தை
நம்மை உணரவைக்கிறது..

                                              படம் முடிந்து வரும் பொழுது நமது மனத்தில் ,..”ச்சே ,..
இவ்வளவு பெரிய ஜீனியஸ்ஸ அங்கீகரிக்க மறந்துட்டோமே...” என்ற எண்ணம் அனைவரிடத்திலும் தோன்றுகிறது . அந்த இடத்தில் டைரக்டர் ஞான ராஜசேகரன் வெற்றிப் பெறுகிறார்,...

                                                                                                         -கத்துக்குட்டி

No comments:

Post a Comment